ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Print lankayarl.com in விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்ஸுக்காக 312 ஓட்டங்களை குவித்த வேளை முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து இரண்டாம் நாளான நேற்று 92.5 ஓவர்களை எதிர்கொண்டு 336 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோனி பேயர்ஸ்டோ 110 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டத்தையும், அணித் தலைவர் ஜோ ரூட் 46 ஓட்டத்தையும், மொய்ன் அலி 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லக்ஷான் சந்தகன் 5 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 65.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அதன்படி திமுத் கருணாரத்ன 83 ஓட்டத்தையும், தனஞ்ய டிசில்வா 73 ஓட்டத்தையும், அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 5 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜெக் லெச் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 96 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது 3 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர ஆரம்பித்த இங்கிலாந்து அணி 69.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 327 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

அணி சார்பாக ஜோஸ் பட்லர் 64 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றுவான் பெரேரா 5 விக்கெட்டுக்களையும், மலிந்த புஸ்பகுமார 3 விக்கெட்டுக்கனையும், லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் குசல் மெண்டீஸ் 15 ஓட்டத்துடனும், லக்ஷான் சந்தகன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.